கும்கி
புதிதாய் ஏதும் கதை பண்ண முடியாது. ஆனால் புதியதாய் ஒர் களம் பிடிக்கலாம். அதற்கு இன்ஸ்பிரஷனாய் பல விஷயங்கள் இருந்தாலும் அதை நமக்கு ஏற்றார்ப் போல சரியான திரைக்கதையாக்கும் வித்தை தெரிந்தால் போதும் மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும். அந்த வகையில் கும்கி தமிழ் சினிமாவிற்கு புதிய களன் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இன்ஸ்பிரேசன் எதுவாக இருக்கும் என்று கேட்டீர்கள் என்றால் ஆச்சர்யப்படுவீர்கள்.
ஒரு மலையடிவார கிராமத்தின் எல்லா செல்வங்களையும் திடீர் திடீரென கொள்ளையர்கள் வந்து கொள்ளையடித்துப் போகிறார்கள். ஊர் மக்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது ஊர் தலைவர் சொல்கிறார் நம்மையும் நம் ஊரையும் காக்க நல்ல வீரர்கள் தேவையென. உடனே ஒவ்வொரு ஊராய் போய் ஏழு சமுராய்களை தெரிவு செய்து அவரின் கிராமத்தை காக்க அழைக்கிறார்கள். அவர்களை கிட்டத்தட்ட தெய்வமாய் நடத்துகிறார்கள். அந்த ஏழு சமுராய்களில் ஒருவனுக்கும் அந்த ஊரில் உள்ள ஒரு பெண்ணுக்கும் காதல். காதல் முற்றுகையில் கொள்ளையர்கள் மீண்டும் கிராமத்தை கொள்ளையடிக்க வர, எப்படி சமூராய் வீரர்கள் அந்த கிராமத்தை காப்பாற்றுகிறார்கள்? அந்த சமுராய்க்கும், அவ்வூர் பெண்ணிற்குமான காதல் என்னவாயிற்று என்பது தான் அகிராகுரசேவாவின் செவன் சமுராயின் கதை.
கும்கியிலும் அதே தான். மலையடிவார கிராமத்தை காட்டு யானை ஒன்று துவம்சம் செய்து ஊரில் புகுந்து மக்களை கொல்கிறது. அரசின் தயவை நாடினாலும் அங்கிருந்து ஏதும் உதவியில்லை. வேறு வழியில்லாமல் ஊர் தலைவர் தங்கள் மக்களிடம் பணம் வசூலித்து காட்டு யானையை கும்கி யானைக் கொண்டு துரத்த நினைத்து கும்கியானையையும் அதன் பாகனையும் வேலைக்கு அமர்த்துகிறார்கள். ஆள் இல்லாததால் கோயிலுக்கும், கல்யாணத்துக்கும் வாடகைக்கு போகும் யானையை வைத்திருக்கும் விக்ரம் பிரபு, தம்பி ராமையாவும், ஒர் உதவியாளரும் ஊருக்குள் தங்களது யானை கும்கி யானை என்று போகிறார்கள். போன இடத்தில் அந்த மலை ஜாதி ஊர்தலைவனின் பெண்ணை பார்த்த மாத்திரத்தில் விக்ரம் காதலிக்க ஆரம்பிக்க, அந்தக் காதலை மெயிண்டெயின் பண்ண விக்ரம் பிரபு அங்கே தங்க, ஒரிஜினல் கும்கியானையாக பயிற்சிவிக்காத யானையை வைத்து காட்டு யானையை கொன்றார்களா? விக்ரம் பிரபு லஷ்மியின் காதல் என்னவாயிற்று? என்பதுதான் கதை. இன்ஸ்பிரேஷன் (உனக்கு மனசாட்சியே இல்லயா? அகிராவின் படத்தோடு எல்லாம் இதை கம்பேர் செய்கிறாயே என்று கேட்பவர்களுக்கு சாரி.. சட்டென ஞாபகம் வந்திருச்சு அதான்.)
விக்ரம் பிரபு கட்டுமஸ்தாக இருக்கிறார். க்ளோசப்புகளில் அவரின் நாசி புடைப்பதை பார்க்கும் போது மெல்ல நடித்துவிடுவார் என்கிற நம்பிக்கையிருக்கிறது. இருந்தாலும் இப்படத்தில் நடித்து நிருபிக்க ஏதுமில்லை.யானை மீது ஏறிவருவதும், கொஞ்சம் கிரக்கமாய் பார்வை பார்ப்பதைத் தவிர, குரல் ஒரிஜினலாய் இருந்தால் ம்ம்ம்..ஓகே. லஷ்மி ஆதிவாசிப் பெண்ணாய் அழகாய் இருக்கிறார். இவருக்கும் பெரிதாய் நடிக்க ஏதுமில்லாவிட்டாலும் இவரது பெரிய கண்கள் பல இடங்களில் கொஞ்சுகிறது. ஆனால் பத்தாப்பூ படிக்கிற பெண் என்கிறார்கள் இடுப்பையும் பிருஷ்டத்தையும் பார்தால் பயமாய் இருக்கு. இயக்குனர் இவர்களை விட அதிகம் நம்பியிருப்பது தம்பிராமையாவைத்தான் என்று தெரிகிறது. அவர் நம்பிக்கையை தன் தும்பிக்கையா நினைத்து படம் நெடுக பேசிக் கொண்டேயிருக்கிறார். சமீப காலங்களில் இவரது ஓவர் டயலாக் ஒத்துவரவே மாட்டேன் என்கிறது. அதே நேரத்தில் கும்கியானை இல்லை என்று தெரிந்துவிட்டால் நம்மை பதம் பார்த்து விடுவார்களே என்று பயத்தில் அமைதியாய் இருக்க, அதை பார்த்த ஊர் மக்கள் இவரை ஆஹா ஓஹோவென புகழ இவர் பயந்து நடுங்குமிடம் நல்ல நகைச்சுவை. இதிலிருந்தாவது அடுத்த படங்களில் இவர் அதிகம் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை புரிந்து கொள்வாராக. மைனா இன்ஸ்பெக்டர் இதில் காட்டிலாக்கா அதிகாரியாய் வந்து அவ்வப்போது முறைக்கிறார் அதைத் தவிர வேறேதும் செய்யவில்லை.
படம் ஆரம்பித்து காட்டுக்குள் போன மாத்திரத்தில் நம்மை விஷுவல் ப்யூட்டியினால் சுகுமார் கட்டிப் போடுகிறார். அற்புதமான வைட் ஷாட்டுகள், அண்மையிலும் அண்மையான க்ளோசப் காட்சிகள் என்று அவர் ஒர் புறம் நம்மை வசீகரிக்கிறார் என்றால் இன்னொருபக்கம் இமான் தன் அருமையான ட்யூன்களால் நம்மை கட்டிப் போடுகிறார்.அய்யய்யோ.. , எப்ப புள்ள சொல்லப் போறே, ஓண்ணும் புரியலை, சை..சை.. ஆகிய பாடல்கள் ஹிட்லிஸ்டில் இருக்கு, பல இடங்களில் இளையராஜாவின் இம்பாக்டில் பாடல்களையே பின்னணியிசையாய் அமைத்திருப்பது சுவாரஸ்யம்.
காட்டு யானையின் ப்ரச்சனை, போலி கும்கி யானை, அதன் பாகன் கேரக்டர் ஆறிமுகம். கிராமத்து ஆட்கள், காட்டு யானைப் பற்றிய பில்டப், மொக்கையான பாகன் அஸிஸ்டெண்ட்டை ஊர் மக்கள் ஏற்றிவிட்டே கதறவிடுவது, லஷ்மியை பார்த்த மாத்திரத்திலேயே காதல், என்று சுவாரஸ்யமாகவே போகிறது. இடைவேளைக்கு பிறகுதான் குழப்பமே.. இவர்களுக்குள் காதல் இரண்டாம் பாதியில் தான் வருகிறது. அதுவும் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸின் போது. அது வரை யானையை கும்கியாக்க முயற்சிக்கும் பயிற்சி, தூரத்திலிருந்து பார்ப்பது, பாட்டு பாடுவது, போனுக்கு சார்ஜ் போடுவது என்று விக்ரம் பிரபு அலைந்து கொண்டிருப்பது போல படமும் அலைந்து கொண்டிருக்கிறது. காமெடி என்று தம்பி ராமையாவையே பேசியே திரைக்கதையை அதிலும் பல இடங்களில் மைண்ட் வாய்ஸிலேயே ஓட விட்டிருப்பது எரிச்சலாக இருக்கிறது. அதிலும் பல இடங்களில் அவர் பேசும் ஆங்கிலம் ரொம்பவெ ஓவர்.
காதலுக்கு ப்ரச்சனை வந்தவுடன் அட இப்போதாவது ஆரம்பித்ததே என்று நிமிர்ந்து உட்காரும் போது, மாபெரும் புயலிலாலேயே சாய்க்க முடியாத மரத்தை ஒத்தையானையாய் சாய்த்ததை காட்டி இன்னும் பில்டப் ஏற்ற, மாபெரும் யானை ஏதோ ஒன்று வரப் போகிறது என்று பார்த்தால் படு சுமாரான படத்தில் வரும் கோயில் யானை மாணிக்கம் ரேஞ்சுக்கு ஒரு சிஜி யானை வர, அதனுடன் சிஜி மாணிக்க யானை சண்டையிடுவதை பார்க்கும் போது ஏன் நல்லா செலவுப் பண்ணித்தான் செய்யறது. என்ன அவசரம்?. படத்தின் உயிர்நாடியே இந்த யானை ஃபைட்தான் எனும் போது அதற்கு மெனக்கெட வேண்டாமா? ராமநாராயணன் ஒர் படத்தில் யானையை கிரிக்கெட் எல்லாம் விளையாட வைப்பார். அதுவே ஒரு மொக்கை சிஜி என்றால் இது அதை விட மொக்க சிஜி. வித்யாசமான படத்தை தருவதாய் நினைத்துக் கொண்டு, ஹீரோவின் காதலையும், அவனையும், அவனை சார்ந்த்வர்களையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் அம்போவென விட்டுவிட்டு எ பிலிம் பை பிரபு சாலமன் என்று போடுவது நெம்ப மோசம் சாரே..
Watch this kumki full video Kumke Tamil movie supar love isture kadak kalkal seen fiLem jaihend Kumki Full Tamil Movie Online
ReplyDelete